போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர், வக்கீல் கைது


தினத்தந்தி 13 May 2023 1:00 AM IST (Updated: 13 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் போதை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர், வக்கீல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவையில் போதை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர், வக்கீல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போதை பொருள் விற்பனை

கோவை மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது.

எனவே போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் போதைப்பொருள் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரத்தினபுரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட் பட்ட பகுதிகளில் போலீசார் போதை பொருள் விற்பனை தடுப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் சுஜி மோகன் என்பவர் உள்பட 7 பேர் இளைஞர்களை குறி வைத்து போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது.

7 பேர் கும்பல்

உடனே போலீசார் அந்த கும்பலை தேடி வந்தனர். அதில் பெங்களூருவில் பதுங்கி இருந்த சுஜிமோகன், பிரசாந்த், அமர், பிரவீன், அஸ்வின், ராஜேஷ், பிரதீப் ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்க ளை கைது செய்து கோவை சரவணம்பட்டிக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் இருந்து 50 கிராம் மெத்தபிட்டமின் என்ற உயர் ரக போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசார ணையில் அவர்கள் 7 பேரும் ரவுடிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் 7 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஆடியோக்கள் சிக்கின

கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் ஒருவர் போலீசாரின் நடமாட்டம் எங்குள்ளது?. அவர்களிடம் சிக்காமல் தப்புவது எப்படி? யாரை போலீசார் தேடுகின்றனர் என்று கூறும் ஆடியோக்கள் இருந்தன.

இது தொடர்பாக விசாரித்த போது, அந்த ஆடியோவில் பேசியது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 32) என்பதும், இவருக்கு உடந்தையாக போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த வக்கீல் ஆசிப் (30) என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது.

போலீஸ்காரர், வக்கீல் கைது

போதை கும்பல் தலைவன் சுஜிமோகனின் வங்கிக்கணக்கில் இருந்து போலீஸ்காரர் ஸ்ரீதர், வக்கீல் ஆசிக் ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அனுப்பப்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே போலீஸ்காரர் ஸ்ரீதர், வக்கீல் ஆசிக் ஆகிய 2 பேரையும் சரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர்.

போதை கும்பல் கொடுத்த பணத்தில் போலீஸ்காரர் ஸ்ரீதர் கோவா, கொடைக்கானல் போன்ற ஊர்களுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கோவையில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர், வக்கீல் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story