தங்கும் விடுதியில் பெண் போலீசின் கணவர் தற்கொலை


தங்கும் விடுதியில் பெண் போலீசின் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாட்ஸ் -அப்பில் மனைவிக்கு ஆடியோ அனுப்பி விட்டு கோவையில் தங்கும் விடுதியில் பெண் போலீசின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

வாட்ஸ் -அப்பில் மனைவிக்கு ஆடியோ அனுப்பி விட்டு கோவையில் தங்கும் விடுதியில் பெண் போலீசின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையம் ருக்மணி நகரை சேர்ந்தவர் தரணி (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி கிருபாவதி. இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கிருபாவதி திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார்.

தரணி தனது மனைவியின் நகைகளை வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 30-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் கோவை வந்து காட்டூர் ராம்நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

தூக்கில் தொங்கினார்

அந்த அறையை சுத்தம் செய்வதற்காக நேற்று முன்தினம் ஊழியர் ஒருவர் சென்று கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்பட வில்லை. இதையடுத்து விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு, மின்விசிறியில் தூக்கிட்டு தரணி பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காட்டூர் போலீசார் விரைந்து வந்து தரணியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடியோ குறுஞ்செய்தி

முன்னதாக அந்த விடுதியில் கிடந்த தரணியின் செல்போனை எடுத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர், தற்கொலை செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தனது மனைவி கிருபாவதிக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோவாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்து உள்ளார்.

அதில் அவர், உனக்கு நான் அதிகளவு கஷ்டத்தை கொடுத்து விட்டேன். நீ என்னை எத்தனை முறை சமாதானப்படுத்தினாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். நீ வருவதற்குள் நான் இறந்து விடுவேன் என்று பேசி அனுப்பியது தெரிய வந்தது.

செல்போன் எண்ணை மாற்றினார்

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தரணி தனது மனைவியின் நகைகளை விற்று செலவு செய்ததால் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியூர்களுக்கு சென்றுவிடுவார். அவரை, அவருடைய மனைவி, செல்போன் மூலம் கண்டுபிடித்து சமாதானப்படுத்தி அழைத்து வருவது வழக்கமாக இருந்து உள்ளது.

இந்த முறை வீட்டைவிட்டு வெளியேறிய தரணி, கோவை வந்து தனது செல்போன் எண்ணை மாற்றி விட்டு புதிய எண் வாங்கி உள்ளார். இதனால் அவருடைய மனைவியால் எங்கு இருக்கிறார் என்று உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர் திருவள்ளூர் மாவட்ட போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடைய தரணி அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்த கிருபா வதி அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். இதற்கிடை யே கிருபாவதியை தொடர்பு கொண்டு தரணி இறந்த தகவலை காட்டூர் போலீசார் தெரிவித்தனர்.


Next Story