துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சியினர் மரியாதை


துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
x

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அரங்கில் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பண்டாரம்பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்ட, துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேரின் உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் கட்சியினர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இளைஞர் பெருமன்றம்

தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சந்தனசேகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர உதவி செயலாளர் ஜீவானந்தம், இந்திய வக்கீல் சங்க மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி 30-வது வட்ட அ.ம.மு.க. செயலாளர் காசிலிங்கம், டூவிபுரத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ம.தி.மு.க

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், தூத்துக்குடி அனல்மின்நிலைய திட்ட செயலாளர் எபனேசர் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குலசேகரன்பட்டினம் வடக்கூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் அரசூர் ராஜ்குமார், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன் உள்பட பலர் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Next Story