பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
பொள்ளாச்சி சி.டி.சி.மேட்டில் பஸ் நிலையம் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி சி.டி.சி.மேட்டில் பஸ் நிலையம் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்திற்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று வந்தார். அவர், நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டு வரும் தெப்பக்குளம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பஸ் நிலையம்
இந்த நிலையில் கோவை ரோடு சி.டி.சி. மேட்டில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து பஸ் நிலையம் கட்டப்பட உள்ள இடத்தை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
அப்போது நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி, தி.மு.க. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சி மூலம் ரூ.40 லட்சத்தில் தெப்பக்குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ரூ.1 கோடியே 88 லட்சம் செலவில் அறிவுசார் மையம், சோமசுந்தராபுரம் லே-அவுட்டில் ரூ.43 லட்சத்தில் பூங்கா பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார். மேலும் சி.டி.சி. மேட்டில் ரூ.7 கோடி செலவில் பஸ் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பணிகளை தொடங்கி, 1 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. கூடுதலாக 2 பூங்காக்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேர்நிலையம் திடல் மார்க்கெட், மீன் மார்க்கெட் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.