ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு - அனைத்து ஏற்பாடுகளும் தயார்


ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு - அனைத்து ஏற்பாடுகளும் தயார்
x

ஈரோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., சுயேச்சைகள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் மற்றும் அவர்களுக்கு வீல் சேர் போன்றவைகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க சிரமமாக இருக்கும் என்பதால் 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு இடையன்காட்டுவலசில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடுகள் போடப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது.


Next Story