கவர்னர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் விழா - தி.மு.க. அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை


கவர்னர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் விழா - தி.மு.க. அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை
x

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்., முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று மாலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கவர்னர் மாளிகை வளாகத்தில் மாட்டு வண்டிகள், கரும்பு, மஞ்சள், மண் பானைகள் ஆகியவற்றைக் கொண்டு பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி மற்றும் முன்னாள் கவர்னர்கள் எம்.எம்.ராஜேந்திரன், எம்.கே.நாராயணன், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றாக பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள்., முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், காவல்துறை உயர் அதிகாரிகள், தேசிய விருது பெற்றவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. முன்னதாக பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக கவர்னர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story