இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல், தேர் திருவிழா


திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

பங்குனி திருவிழா

திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. பின்னர் காப்பு கட்டப்பட்டு ஒவ்வொரு நாளும் முத்துமாரியம்மனுக்கு மண்டகப்படி நடைபெற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவான பொங்கல் விழா மற்றும் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் இளஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து கிடா, கோழி வெட்டியும், பொங்கல் வைத்தும் அம்மனை தரிசனம் செய்தனர்.

தேர் வடம் பிடிப்பு

மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். குழந்தைகளை கரும்பு தொட்டில் கட்டி வழிபாடு செய்தனர். பின்னர் பூசாரிக்கு பெண் வேடமிட்டு திருமயத்தில் இருந்து கரகம் எடுத்துக்கொண்டு கோவிலை சென்று அடைந்தனர். பின்னர் கரகத்தை இறக்கி வைத்து கையில் உள்ள கத்தியை குடத்தின் விளிம்பில் நிறுத்தினார்கள். கத்தி நிற்பதை திரளான பக்தர்கள் கண்டு வணங்கினர். இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை வைத்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி வலம் வந்து தேரடியை வந்தடைந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், கிராம மக்களும் செய்திருந்தனர். விழாவையொட்டி சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story