பொங்கல் பண்டிகை கோலாகலம்


பொங்கல் பண்டிகை கோலாகலம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாட்டு பொங்கலன்று கால்நடைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

பெரம்பலூர்

பொங்கல் பண்டிகை கோலாகலம்

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர், மங்களமேடு, பாடாலூர் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக பெண்கள் அவர்களது வீட்டின் முன்பு பெரிய அளவிலான வண்ணக்கோலமிட்டிருந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் சில வீடுகளில் கோலத்தின் அருகே தமிழ்நாடு வாழ்க என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குல தெய்வ கோவில்களிலும் வழிபாடு நடந்தது.

மாட்டு பொங்கலன்று கால்நடைகளுக்கு வழிபாடு

நேற்று உழவுக்கு வித்திட்ட மாடுகளை அலங்கரிக்கும் விதமாக மாட்டு பொங்கல் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் காலை நேரத்திலும், பெரம்பலூர் நகர் பகுதிகளில் மாலை நேரத்திலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளான பசுமாடு, கன்றுக்குட்டிகள், காளைகள் ஆகியவற்றை குளிப்பாட்டி மூக்கனாங்கயிறு, கழுத்து மணி, அந்த மாடுகளின் கொம்புகளில் கயிறு கட்டியும், உடலில் கலர் பொடியில் பொட்டு இட்டும் அலங்கரித்தனர். பின்னர் அவற்றிற்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் திலகமிட்டு, பூஜை செய்து சாதம் ஊட்டி விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்போர் வழிபட்டனர். வீட்டில் கால்நடைகள் இல்லாதவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

கரும்பு கட்டு ரூ.100-க்கு விற்பனை

மேலும் பொங்கல், மாட்டு பொங்கலையொட்டி பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதிகளில் கரும்பு கட்டுகளின் விற்பனை நடந்தது. பொங்கல் அன்று மட்டும்தான் அதன் விற்பனை படுஜோராக இருந்தது. அப்போது 10 கரும்புகளை கொண்ட ஒரு கரும்பு கட்ைட ரூ.350 என்கிற விலையில் வியாபாரிகள் விற்பனை செய்தனர். கரும்புகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியதால், நேற்று ஒரு கரும்பு கட்டை வியாபாரிகள் ரூ.100-க்கு கூவி, கூவி விற்பனை செய்தனர்.

1 More update

Next Story