இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

பழனி அருகே இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
பழனி அருகே உள்ள புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1,000 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளருமான பொன்ராஜ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பழனிசாமி, ஊராட்சி வார்டு கவுன்சிலர் செல்வசிவராம், ரேஷன் கடை விற்பனையாளர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகை வழங்கியது குறித்து முகாமில் உள்ள விக்டர், யோகேஸ்வரி கூறுகையில், எங்கள் மக்களையும் இந்த நாட்டு குடிமக்கள் போல பாவித்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.