சேலத்தில் களை கட்டியது பொங்கல் விற்பனை


சேலத்தில் களை கட்டியது பொங்கல் விற்பனை
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. கரும்பு, மஞ்சள் குலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

சேலம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. கரும்பு, மஞ்சள் குலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் சிறுவர், சிறுமிகளுக்கும், பெரியவர்களுக்கும் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்துவற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் கிராமப்புறங்களில் பொங்கல் விழா தற்போது களைகட்ட தொடங்கிஉள்ளது.

இன்று (சனிக்கிழமை) போகி பண்டிகையையொட்டி வீடுகளில் உள்ள பழைய மற்றும் கழிவு பொருட்களை அகற்றிவிட்டு தூய்மை செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆவாரம் பூ, பூலாப்பூ, வேப்பிலை, மாவிலை, பண்ணைப்பூ ஆகியவை கொண்டு காப்பு கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். இதனால் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் காப்புகட்டு பூக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை பொதுமக்கள் ஆர்முடன் வீடுகளுக்கு வாங்கி செல்வதை காணமுடிகிறது.

கரும்பு விற்பனை

சேலம் மாநகரில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்ட பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு ஆங்காங்கே விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. அஸ்தம்பட்டி உழவர் சந்தை, செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, சூரமங்கலம் உழவர் சந்தை, தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

ஒரு ஜோடி கரும்பு (உயரத்திற்கு ஏற்ப) ரூ.80 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மதியம் முதலே கரும்பு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

மஞ்சள் குலை

இதேபோல் எடப்பாடி, பூலாம்பட்டி, இளம்பிள்ளை, ஓமலூர், காடையாம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலர் மொத்தமாக மஞ்சள் குலைகளை சேலத்திற்கு கொண்டு வந்து அதனை விற்பனை செய்கின்றனர். பட்டைக்கோவில் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஞ்சள் கொத்துக்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். ஒரு மஞ்சள் குலை ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் பழைய பஸ்நிலையம், பட்டைக்கோவில், பால் மார்க்கெட், கடைவீதி, ஆனந்தாபாலம், பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் மற்றும் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய உழவர் சந்தைகள் முன்பு கரும்பு, மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.


Next Story