மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி


மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி
x
தினத்தந்தி 22 March 2024 10:11 AM GMT (Updated: 22 March 2024 11:34 AM GMT)

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கில், ஐகோர்ட்டு விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்,எல்,ஏ. ஆனார். இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு முதல்-அமைச்சர் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.

கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக கவர்னரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி, கவர்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக கண்டனம் தெரிவித்தார்.

மேலும் கவர்னர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. தமிழக கவர்னர் சுப்ரீம் கோர்ட்டை அவமதித்துள்ளார். பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு இருநீதிபதிகள் கொண்ட அமர்வு நிறுத்தி வைத்த பின், அவர் குற்றவாளி இல்லை என கவர்னர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது. கவர்னருக்கு இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம் இல்லையென்றால் இன்று தீர்ப்பு அளிக்கிறோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, நேற்று மாலை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்ய முன்வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பூங்கொத்து வழங்கினார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறையை ராஜ கண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில், பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியின் வசம் இருந்த கதர், கிராம தொழில்கள் வாரியம் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story