ஆடி மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஆடி மாத கிருத்திகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

ஆடி கிருத்திகை

ஆடி மாத கிருத்திகையையொட்டி நேற்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல்லில் மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம் நடந்தது.

பின்னர் சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காந்தமலை பாலதண்டாயுதபாணி

மோகனூர் காந்தமலை பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமிக்கு கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் பால் எடுத்து வந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதேபோல் எஸ்.வாழவந்தியை அடுத்துள்ள வேட்டுவம்பாளையம் ஆனந்தபுரத்து முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அணிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில்களில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

நன்செய் இடையாறு ராஜா சுவாமி

நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் சாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலை சுப்பிரமணியர் கோவில் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story