புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி:
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை
பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதமிருந்து, வழிபாடு நடத்துவார்கள். மேலும் பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததின் எதிரொலியாக இந்த ஆண்டு பக்தர்கள் வழக்கம் போல பெருமாள் கோவில்களில் அனுமதிக்கப்பட்டார்கள்.
சிறப்பு பூஜைகள்
அந்த வகையில் கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற கனவாய்பட்டி வெங்கட்ரமண சாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாளேகுளி அனுமந்தராய சாமி, கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் பெருமாள் சன்னதி, மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில், கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள் கோவில், கிருஷ்ணா கோவில் தெரு நவநீத வேணு கோபால சாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், பாப்பாரப்பட்டி வேணுகோபால் சாமி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். அதேபோல கனவாய்ப்பட்டி பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பக்தர்கள் மகிழ்ச்சி
இதேபோல ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை, சூளகிரி, பாகலூர், ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம் என மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்படாத நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.