பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

சித்திரை திருவிழா

ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினசரி ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் பல்வேறு அலங்காரங்களில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 10-ம் நாள் திருவிழாவான பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பூக்குழி இறங்கிய பக்தர்கள்

இதையடுத்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அம்மன் சப்பரம் வீதி உலா வந்து பூக்குழி திடலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். விழாவில் ராம்கோ நிறுவனங்களின் சார்பில் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சமூக சேவை நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் தண்ணீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story