பூவராகசுவாமி கோவில் தேர் திருவிழா


பூவராகசுவாமி கோவில் தேர் திருவிழா
x
தினத்தந்தி 27 April 2023 6:45 PM GMT (Updated: 27 April 2023 6:46 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்

பூவராகசுவாமி கோவில்

ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும் மூலவர் பூவராகசுவாமி, அம்புஜவல்லி தாயார், உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத யக்ஞவராக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

கொடியேற்றம்

பின்னர் உற்சவர் யக்ஞவராக சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளியதும், கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 10 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து புஷ்பக விமானத்தில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.

இதில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன், துணைத் தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர்கள் தங்க.கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணைத்தலைவர் ரவி, இணை செயலாளர் பூவராகமூர்த்தி மற்றும் வர்த்தக சங்க பிரமுகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

3-ந் தேதி தேர் திருவிழா

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளுடன், காலையில் திருப்பல்லக்கில் வீதி புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

மேலும் 5-ந் தேதி காலை மட்டையடி உற்சவமும், மதியம் 12 மணிக்கு நித்திய புஷ்கரணையில் தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும், 6-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விடையாற்றி திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story