இன்டாகிராமில் பிரபலமான சிறுமி தற்கொலை


இன்டாகிராமில் பிரபலமான சிறுமி தற்கொலை
x

திருவள்ளூரில் இன்டாகிராமில் பிரபலமான சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

இன்ஸ்டா குயின்

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த பெரியகுப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கற்பகம். இவர்களது மகள் பிரதிக்ஷா (வயது 9). திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயதிலிருந்தே சினிமாவில் வரும் காமெடி காட்சிகளுக்கு டயலாக் பேசுவதும், சினிமா பாடல்களுக்கு முக பாவனையுடன் நடனமாடுவதுமாக சிறுமி இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ஐ.டி.யை கிரியேட் செய்து அதில் சினிமா பாடல்கள், கானா பாடல்கள், கிராமிய பாடல்கள், காதல் பாடல்களுக்கு ஏற்றவாறு முகபாவனை காட்டி நடனமாடி 'ரீல்ஸ்' வீடியோக்களை அதில் வெளியிட தொடங்கினார்.

குழந்தை பருவத்திலேயே அவருக்கு இருந்த திறமைகள் அவரை இன்ஸ்டாவில் பிரபலமாக்கியது. இதுவரை மொத்தம் 50-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் தனது முகபாவனையுடன் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோக்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் வீடியோவை பார்த்த பலரும் சிறுமி பிரதிக்ஷாவை ''இன்ஸ்டா குயின்'' என்று அழைத்து வந்தனர்.

அழகிய முகபாவனையுடன் நடனம்

குறிப்பாக ''ஹே... மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே... அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே... ம்... மச்சான் எப்போ வரப்போற மச்சான் எப்பவரபோற...

''கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன் கன்பியூஷன் ஆகிறேன்''...

''சின்ன சின்ன ஆச... திக்கி திக்கி பேச... மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காற்றோட வீச...

''தப்பு தண்டா பண்ணதில்ல... பொய் கூட சொன்னதில்லை நானு... அது நானு''... நாலு பேரு மத்தியில பொங்க வைப்பேன் நெத்தியில நானு... அது நானு... போன்ற சினிமா காதல் பாடல், கானா பாடல், கிராமிய பாடல் உள்ளிட்ட பாடல்களுக்கு சிறுமி அழகிய முகபாவனையுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு பிரதிக்ஷா பக்கத்து தெருவில் வசிக்கும் தனது பாட்டி வீட்டில் தனது தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியும் தாய் கற்பகமும் சிறுமி பிரதிக்ஷாவிடம் விளையாடியது போதும் வீட்டிற்கு சென்று படி என்று கூறிவிட்டு வீட்டின் சாவியை பிரதிக்ஷாவிடம் கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்பொழுது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பால் போடப்பட்டிருந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி கதவை தட்டினார்.

பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் பதறிபோன கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறை ஜன்னல் கதவை உடைத்து பார்த்தார். அப்போது சிறுமி பிரதிக்ஷா வெள்ளை நிற சிறிய துண்டால் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கினார்.

உடனே வீட்டின் மேற்புற கூரையை பிரித்து வீட்டிற்குள் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறையின் கதவை உடைத்து உயிருக்கு போராடிய சிறுமியை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரதிக்ஷா ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காரணம் என்ன?

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 வயது சிறுமி எப்படி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது சிறுமி பிரதிக்ஷா வீட்டில் படுக்கையறையில் மெத்தையின் மீது சிறிய ஸ்டூல் போட்டு ஏறி ஜன்னல் கம்பியில் துண்டை கட்டி தூக்குப்போட்டு கொண்டு அதன் பிறகு ஸ்டூலில் இருந்து குதித்துள்ளார். அப்பொழுது துண்டு கழுத்தை முழுவதுமாக நெருங்காததால் தூக்கில் தொங்கியபடியே சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

வெளியேசென்ற கிருஷ்ணமூர்த்தி உடனடியாக வீட்டிற்கு வந்திருந்தால் ஒருவேளை சிறுமியை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் ஒரு மணி நேரம் கழித்து வந்ததால் சிறுமியை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிகிறது. சிறுமி பிரதிக்க்ஷா தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் தந்தை கண்டித்ததால் ஒருவேளை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story