கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
பெருமாநல்லூரில் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும், தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கன்னிமார்தோட்டம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் ெபாதுமக்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பள்ளிக்கு செல்ல பாதை வசதி வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் வீரபாண்டி போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகிறோம் எங்கள் குடியிருப்பின் வடக்கு பகுதியில் அரசு நத்தம் காலியிடமாக உள்ளது. இது பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகிறோம். கொண்டத்துக்காளியம்மன் நகர், அறிவொளிநகர், ஆதிதிராவிடர் காலனி, ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள தெரு மற்றும் ஊராட்சி அலுவலகத்தை எங்கள் தெருவோடு இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக உள்ளது.
காத்திருப்பு போராட்டம்
இந்தநிலையில் அரசு நத்தம் காலியிடத்தில் உள்ள விநாயகர் கோவிலை விரிவுபடுத்துவதாக கூறி வழிப்பாதையில் சுற்றுச்சுவர் கட்ட தொடங்கியுள்ளனர். இதுஒருபுறம் இருக்க அருகே குடியிருக்கும் தனியார் வழிப்பாதையை முற்றிலுமாக பயன்படுத்த முடியாத வகையில் கழிப்பிடம் கட்டியும், தகரங்களை வைத்து அடைத்தும் மக்கள் நடக்க முடியாதபடி ஆக்கிரமித்துவிட்டார். நத்தம் இடத்தை ஆக்கிரமிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். நாங்கள் ஏற்கனவே ஊராட்சி நிர்வாகம் மற்றும் அவினாசி தாசில்தார், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இந்தநிலையில் பொதுப்பாதையை தனியார் மீண்டும் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினார்கள். இதை தடுக்க சென்றவர்களை மிரட்டுகிறார்கள். இந்த பாதையை அடைத்தால் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும். பஸ் நிறுத்தத்துக்கும் செல்ல வேண்டும். இதை கண்டித்து நேற்று (நேற்று முன்தினம்) இரவு திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து நள்ளிரவு 2 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு போலீசார் எங்களை அனுப்பி வைத்தனர். எங்களுக்கு பாதை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
கலெக்டரிடம் மனு
தங்களுக்கு பாதை வசதியை ஏற்படுத்திக்கொடுத்த பின்னரே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு செல்வோம் என்று கூறி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மதியம் கலெக்டர் கிறிஸ்துராஜ் அங்கு வந்து, மக்களிடம் மனு பெற்று விசாரித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.