போராட்டத்தை கைவிட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள்


போராட்டத்தை கைவிட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள்
x
திருப்பூர்


அனைவருக்கும் பணி வழங்குவதாக உறுதி அளித்ததால் உடுமலை நகராட்சி தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

முற்றுகை போராட்டம்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் நகரப்பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும் நேரடியாக வீதி வீதியாக சென்று வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனம் எடுத்ததாக தெரிகிறது.

இந்த சூழலில் நேற்று முன்தினம் திடீரென 92 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியதாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் வேலை நீக்கம் செய்த பணியாளர்களுக்கு ஆதரவாக உடுமலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

சமைத்து சாப்பிட்டனர்

இரவிலும் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு அங்கேயே போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை இவர்களுக்கு ஆதரவாக நிரந்தர பணியாளர்களும் களத்தில் குதித்தனர்.

இதனால் உடுமலை பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பொதுமக்களும் குப்பைகளை எடுத்து வீட்டு வாசலில் வைத்து விட்டு மணி ஓசையுடன் கூடிய அக்கா குப்பைங்க... அண்ணா குப்பைங்க... என்ற தூய்மை பணியாளர்களின் கூக்குரலுக்காக வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தும் தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

போராட்டம் வாபஸ்

இந்த நிலையில் உடுமலை நகர மன்றத்தலைவர் மத்தீன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் வழக்கமான குப்பை சேகரிக்கும் பணியை தொடங்கினார்கள். இதனால் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் உடுமலை பகுதியில் சில நாட்களாக பரபரப்பு நிலவி வந்தது.


Next Story