வடமதுரை சார் பதிவாளர் அலுவலக பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
வடமதுரையில் சார் பதிவாளர் அலுவலக பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அருகே கம்பிளியம்பட்டி, அணைக்குளம்புதூர் பகுதியை சேர்ந்தவர் காசிராம். விவசாயி. இவர் தனது சொத்துக்கு வில்லங்க சான்றிதழ் கேட்டு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். ஆனால் மனு கொடுத்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை காசிராமுக்கு வில்லங்க சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து காசிராம் 2 முறை வக்கீல் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும், அவருக்கு வில்லங்க சான்று கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் போஸ்டர் ஒட்டி தெரியப்படுத்தினார். அதன்பிறகு 2 மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் காசிராம் தனது மனுவுக்கு எந்த பதிலும் தராத மாவட்ட பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வடமதுரை சார்பதிவாளர் அலுவலக பகுதியில் ஒட்டினார். இந்த சம்பவம் வடமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.