பவானியில் நாளை கடையடைப்பு என போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
பவானியில் நாளை கடையடைப்பு என போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
பவானி
பவானியில் சில இடங்களில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துகள் இருப்பதாக வக்பு வாரியம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பவானி பத்திர பதிவு அலுவலகத்தில் பழைய பஸ் நிலையம், சீனிவாசபுரம், ராயல் தியேட்டர் ரோடு, பழனிபுரம், வர்னபுரம், பாவடி வீதி, மேட்டூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதமாக பத்திர பதிவுகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் அவதிப்பட்டார்கள்.
எனவே வக்பு வாரிய சொத்துகள் எங்கெங்கு உள்ளது என்பதை முறைப்படுத்த வேண்டும் என பவானியில் நிலமீட்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இதற்கான முயற்சி எடுத்து வருகிறது. இதனால் கோபி ஆர்.டி.ஓ, தலைமையில் போலீசார் இந்த பிரச்சினையில் சமரச தீர்வு பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.
இந்தநிலையில் இதுபற்றி அரசின் கவனத்தை ஈர்க்க பவானி நகர் முழுவதும், 'நாளை (வியாழக்கிழமை) பவானியில் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால் பவானியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிழித்து அகற்றினார்கள்.