மாசி-பங்குனி மாத திருவிழாவையொட்டி மானாமதுரையில், நேர்த்திக்கடன் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


மாசி-பங்குனி மாத திருவிழாவையொட்டி மானாமதுரையில், நேர்த்திக்கடன் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 14 Feb 2023 6:45 PM GMT (Updated: 14 Feb 2023 6:46 PM GMT)

மாசி-பங்குனி மாத திருவிழாக்கள் தொடங்க உள்ளதால் மானாமதுரை பகுதியில் நேர்த்திக்கடன் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை

மானாமதுரை,

மாசி-பங்குனி மாத திருவிழாக்கள் தொடங்க உள்ளதால் மானாமதுரை பகுதியில் நேர்த்திக்கடன் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நேர்த்திக்கடன் பானைகள்

மானாமதுரை நகரானது மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பிற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் பானைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பொங்கல் விழா நெருங்கும் போது பொங்கல் பானைகள் தயாரிப்பது, கோடைக்காலங்களில் மண் பானைகள், கூஜாக்கள் தயாரிப்பது, கார்த்திகை மாத காலங்களில் கார்த்திகை அகல் விளக்குகள் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மாசி மாதம் தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் தொடங்குகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, திருப்புவனம் மாரியம்மன் கோவில் திருவிழா, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா போன்ற பல்வேறு ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானைகள், சிறிய பானைகள் எடுப்பார்கள். தற்போது அந்த மண்பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர பானைகளுக்கு வர்ணம் பூசிய நிலையில் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியும் நடந்து வருகிறது.

வர்ணம் பூசும் பணி

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் கனகுமெய்யப்பன் கூறியதாவது:-

ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப பல்வேறு பொருட்களை தயார் செய்து அவற்றை சொசைட்டி மூலம் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம். கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளோம். தற்போது மாவட்டம் முழுவதும் மாசி-பங்குனி திருவிழாக்கள் தொடங்க உள்ளதால் பானை தயாரிக்கும் தொழில் சூடுபிடித்து உள்ளது. இதில் தற்போது மூன்று முகம் பதித்த அக்னி சட்டி ரூ.40-க்கும், 5 முகங்கள் பதித்த சட்டி ரூ.80-க்கும், 7 முகம் பதித்த அக்னி சட்டி ரூ.110-க்கும், 9 முகம் கொண்ட அக்னி சட்டி ரூ.140-க்கும் விற்பனை செய்து வருகிறோம். இதுதவிர ஆயிரம் கண் பானை ரூ.20-க்கும் விற்பனை செய்து வருகிறோம்.

தற்போது இந்த நேர்த்திக்கடன் பானைகள் தயாரித்து அவற்றை காய வைத்த நிலையில் வர்ணம் பூசி வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்ப உள்ளோம். இங்கிருந்து விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இந்த பானைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story