மண்பாண்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் சுமார் 200 குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்க கடந்த 2019-ம் ஆண்டு கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மண் எடுக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதை தொடர்ந்து மண்பாண்ட தொழிலாளர்கள் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
பானை, அடுப்புக்கு தட்டுப்பாடு
கோவை தெற்கு மாவட்ட பகுதிகளில் சுமார் 200 குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். மண்பாண்ட பொருட்களை எடுத்து சென்று 5 ஆயிரம் குடும்பத்தினர் விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பிற்கு முன் கடந்த 2019-ம் ஆண்டு கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதி அளித்தனர். அதன்பிறகு மண் எடுக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோவில்களுக்கு தேவையான உருவாரம், பூச்சட்டி, அகல்விளக்கு போன்றவற்றை தயாரிக்க முடியவில்லை.
மேலும் பானை, அடுப்பு போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மண் இல்லாததால் பொருட்களை தயாரித்து கொடுக்க முடியவில்லை. தற்போது திருக்கார்த்திகையையொட்டி அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு மண் கேட்டு விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லை.
86 யூனிட் மண் போதாது
மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவதாக கூறியதை தொடர்ந்து 2 முறை குளத்தில் வழித்தடம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் வராததால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. எனவே குடும்பத்துக்கு 4 யூனிட் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். கலெக்டர், தாசில்தார்களிடம் அனுமதி பெற்று, பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகுவதால் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே மண் எடுக்க பொதுப்பணித்துறை அனுமதியை பெற்றால் மட்டும் போதும் என்று அறிவிக்க வேண்டும். தற்போது அதிகாரிகள் 86 யூனிட் மண் எடுக்க அனுமதித்து உள்ளனர். கலெக்டரிடம் அனுமதி பெற்ற பிறகு மண் எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 86 யூனிட் மண் போதுமானதாக இருக்காது. எனவே கூடுதலாக மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.