கோழி இறைச்சி விலை கடும் உயர்வு


கோழி இறைச்சி விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:46 AM IST (Updated: 13 Jun 2023 4:20 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி

திருச்சியில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழக எல்லையில் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டு தோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்கிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் நாளை (புதன்கிழமை) வரை இந்த தடை அமலில் இருக்கும். இதனால், தமிழகத்தில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை என்பதால், மீன் வரத்து குறைந்து ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைப்பதில்லை.

இதன்காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்களுக்கு கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனால், மீன்களின் விலை வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாக உள்ளது. அதேநேரம் ஆட்டு இறைச்சி எலும்புடன் ஒரு கிலோ ரூ.800-க்கும், எலும்பு இன்றி ஒரு கிலோ ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோழி இறைச்சி விலை உயர்வு

மீன் மற்றும் ஆட்டு இறைச்சி வாங்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். இதனால் கடந்த 2 மாதங்களாக அசைவ பிரியர்களின் கவனம் கோழி இறைச்சி பக்கம் திரும்பியுள்ளது. இந்தநிலையில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் கறிக்கோழிஉற்பத்தி குறைந்து, குறைவாகவே அவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் திருச்சியில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

திருச்சியில் கடந்த ஜனவரி தொடக்கத்தில் கோழி இறைச்சி மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்பட்டது. கடந்த ஏப்ரல், மே மாதத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சி சில்லரை விலையில் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவால் கோழி இறைச்சி விலை கடுமையாக உயரத்தொடங்கியது.

ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை

திருச்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.260-க்கு விற்கப்படுகிறது. மீன்பிடி தடைக்காலம் நாளை முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மீன் வரத்து அதிகரிக்க தொடங்கும். மேலும், விரைவில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து கறிக்கோழி உற்பத்தியும் அதிகரிக்கும். அதன்பிறகே கோழி இறைச்சி மற்றும் மீன்கள் விலை குறையும் என்று வியாபாரிகள் கூறினார்கள்.


Next Story