கொட்டித்தீர்த்த கோடை மழை


கொட்டித்தீர்த்த கோடை மழை
x

கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த கோடை மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர்

மக்களை வாட்டி வதைக்கும் வெயில்

கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்த நிலையில் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் கரூரில் நேற்று காலை முதலே கருமேகங்கள் திரண்டு மேகமூட்டமாக காட்சியளித்தது. ஆனால் மழை பெய்யவில்லை. தாந்தோன்றிமலை பகுதியில் காலை 9.45 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது தாந்தோன்றிமலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர் மேகமூட்டமாக காட்சியளித்தது. இதனால் கரூர் பகுதியில் நேற்று வெயிலின் அளவு குறைந்து காணப்பட்டது.

திடீர் மழையால் மகிழ்ச்சி

இதேபோல் நடையனூர், கோம்புப்பாளையம், கரைப்பாளையம், பேச்சிப்பாறை, சேமங்கி, நொய்யல், குறுக்கு சாலை, புன்னம் சத்திரம், தவுட்டுப்பாளையம், புங்கோடை, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், மூலிமங்கலம், குறுக்குபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

அதைத்தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழை பின்னர் சாரல் மழையாக பெய்தது. அத்துடன் காற்றுடன் இடி, மின்னல் ஏற்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. நொய்யல் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் வானம் இருந்ததாலும், லேசான சாரல் மழை பெய்ததாலும் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story