செட்டிகுறிச்சியில் அடிக்கடி மின்தடை
செட்டிகுறிச்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறு வணிகங்கள், கோழி பண்ணைகள் இப்பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்குள்ள டிரான்ஸ்பார்மருக்கு வரும் உயர்மின் பாதைகள், மின் வினியோக பாதைகளில் உள்ள மரம், செடி, கொடிகள் வெட்டப்படாத காரணத்தினாலேயே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறினர். மேலும் கோடை காலங்களில் தொடர் மின்னழுத்த குறைபாடும், மழை காலங்களில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருவதாகவும், கடந்த 2 நாட்களில் நாளொன்றுக்கு 10 தடவைக்கு மேல் மின்தடை ஏற்பட்டதாகவும் இப்பகுதி மக்கள் கூறினர். கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து குறைந்த மின்னழுத்த குறைபாட்டை தடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.