மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு


மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு
x

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மங்களமேட்டில் ஆலங்கட்டி மழை பெய்தது.

அரியலூர்

ஆலங்கட்டி மழை

கோடைகாலத்தில் வழக்கமான அளவை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீரென இடி-மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அவ்வப்போது சீரான மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மின்சாரம் துண்டிப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஜெயங்கொண்டத்தில் மழைக்கு முன்பாக அதிவேகத்துடன் அணுகுண்டு வெடித்தது போல் பெரிய சத்தம் கேட்டதால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் உடையார்பாளையம், முனையத்தரியன்பட்டி, கழுமங்கலம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, இடையார், ஏந்தல், தத்தனூர், வெண்மான்கொண்டான், மனகெதி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கோட்டியால், பருக்கல், நடுவளூர், காடுவெட்டாங்குறிச்சி, சோழங்குறிச்சி, வானத்திரியான்பட்டிணம் உள்ளிட்ட ஊர்களில் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் இப்பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். உடையார்பாளையம் கடைவீதி மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறு போல் ஓடியது. இந்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மரங்கள் முறிந்து விழுந்தன

செந்துறை பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பயங்கர இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. மழைக்கு முன்னர் வீசிய சூறாவளி காற்றால் செந்துறை பகுதியில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் செந்துறை அரசு பொது மருத்துவமனை வாசலில் இருந்த வேப்பமரம் அடியோடு சாய்ந்தது. அதேபோன்று செந்துறை காலனி தெருவில் இருந்த தென்னை மரம் அடியோடு சாய்ந்து மின்கம்பியில் விழுந்தது. இதனால் 2-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோன்று ஆர்.எஸ்.மாத்தூர் செல்லும் சாலை மற்றும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் செந்துறை பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் செந்துறை பகுதி மக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்தனர்.


Next Story