மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடை... நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி


மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடை... நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி
x

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடையால் நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வார விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். இந்த நிலையில் நேற்று திடீரென மாமல்லபுரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. மின் தடையால் இன்வர்டர், யு.பி.எஸ். ஜெனரேட்டர் வசதி இல்லாத கடற்கரை கோவிலின் நுழைவு சீட்டு கட்டண மையத்தில் நுழைவு சீட்டு வழங்க முடியாததால் அந்த மையம் மூடப்பட்டது.

நுழைவு சீட்டு வாங்க வந்த சுற்றுலா பயணிகளை கியூ.ஆர் கோடு பலகையில் ஸ்கேன் செய்து ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்து கொள்ளுமாறு தொல்லியல் துறை பணியாளர்கள் அறிவுறுத்தி அனுப்பினர்.

பிறகு சுற்றுலா பயணிகள் பலர் கடற்கரை கோவிலின் முகப்பு வாயிலில் உள்ளே வைக்கப்பட்டிருந்த தொல்லியல் துறையின் கியூ-ஆர் பார் கோடு பலகையில் தங்கள் செல்போன் மூலம் ரூ.40 கட்டணம் செலுத்தி, தங்கள் செல்போனில் பதிவாகியிருந்த நுழைவு சீட்டை புராதன சின்னங்களின் நுழைவு வாயிலில் காண்பித்து சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். குறிப்பாக பல பயணிகளின் செல்போன் சிக்னலும், இணைய தள சேவையும் சரியாக இயங்காததால் மணிக்கணக்கில் காத்திருந்து பிறகு செல்போன் சிக்னலும், சர்வரும் சரிவர இயங்கிய பிறகு ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்து கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது.

ஒரு புறம் நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டதால் செல்போன் வசதி இல்லாத சுற்றுலா பயணிகள் சிலர் மற்ற பயணிகளிடம் பணம் கொடுத்து அவர்கள் செல்போன் மூலம் டிக்கட் பதிவு செய்து புராதன சின்னங்களை கண்டுகளித்துவிட்டு சென்றதை காண முடிந்தது. மின் தடை ஏற்பட்டாலும் ஜெனரேட்டர், யு.பி.எஸ். இன்வர்ட்டர் வசதி ஏற்படுத்தி கடற்கரை கோவிலில் உள்ள நுழைவு சீட்டு மையம் தங்குதடையின்றி இயங்க தொல்லியல் துறை வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story