அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

காவிரி சிக்கல் குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த வசதியாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி ஆணையத்திற்கு வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தமிழ்நாட்டிற்கு கடந்த 9-ஆம் நாள் வரை 38 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும். டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்தில், இந்தக் கோரிக்கையை தமிழக குழுவினர் முன்வைத்த போது, அதை ஏற்க கர்நாடக குழுவினர் மறுத்து விட்டனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளிலும் இன்று காலை நிலவரப்படி 93.05 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 81 விழுக்காடு ஆகும். ஹாரங்கி அணை 99 விழுக்காடும், கபினி அணை 93 விழுக்காடும் நிரம்பியிருக்கின்றன. தமிழகத்திற்கு விடுவதற்கு தேவையானதை விட 244% கூடுதல் தண்ணீர் இருக்கும் போதிலும் தமிழகத்திற்கு தண்ணீர் விட கர்நாடகம் மறுப்பதன் மூலம் அதன் இயல்பு குணம் அம்பலமாகிவிட்டது. இது நன்கு அறிந்த உண்மை தான். அதனால் தான் கர்நாடகத்தை நம்பி மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுத்து விட்ட நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. காவிரி ஆணைய விதிகள் 10 (3-18)-இன்படி தமது முடிவை செயல்படுத்த உதவும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதைத் தவிர காவிரி ஆணையத்திற்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை.

காவிரி ஆணையம் முதலில் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செம்மையாக செயல்படுத்தும் நோக்குடன் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையதிற்கு வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இனியாவது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும். காவிரி சிக்கல் குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த வசதியாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரத்தை வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story