திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை: அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை செய்ய அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவரும், இந்து மக்கள் கட்சி செயலாளருமான ராமலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருப்பரங்குன்றம் மலையின் மேல் ஒரு பகுதியில் காசிவிஸ்வநாதர் கோவிலும், மற்றொரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளன.
மலைக்கு மேலே செல்லும் பாதையில் நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மலை மீது தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகி, "திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்றுவது தொடர்பாக ஏற்கனவே சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது" என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், "மலைக்குமேல் தானே தர்காவும் உள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது" என கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.