உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்தசாமியார் உருவ பொம்மை எரிப்பு :தி.மு.க.வினர் போராட்டம்
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்த சாமியார் உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தனா்.
சங்கராபுரம்,
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அயோத்தியைச் சேர்ந்த சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதால், அவருடைய தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யாவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தி.மு.க இளைஞரணி சார்பில் சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யாவை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆஷிக், மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்தி நடராஜன், மாவட்ட இளைஞர் அணி கதிரவன், வக்கீல் பாலஅண்ணாமலை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யாவின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் ரவி, தயாளன், செங்குட்டுவன், தயாளமூர்த்தி, குணா, முருகன், லட்சுமி, ஏழுமலை, தனவேல், மணிகண்டன், கார்த்திக் சுரேஷ், முனுசாமி, சீனு மற்றும் ஒன்றிய, நகர, இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.