வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்-கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாகவும், முழு அக்கறையுடனும் மேற்கொள்ள வேண்டுமென கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை கூடுதல் தலைமை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகர், நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சி.பழனி கூறியதாவது:-
122 இடங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் அதிக நீரால் சூழக்கூடிய பகுதிகளாக 8 இடங்களும், நடுத்தரமான அதிக நீரால் சூழக்கூடிய பகுதிகளாக 35 இடங்களும், பகுதியளவு நீரால் சூழக்கூடிய பகுதிகளாக 79 இடங்களும் ஆக மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டன.
அந்த இடங்களில் தகுந்த முன்னெச்சரிச்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆபத்து காலத்தில் உதவ 500 ஆபத்துகால நண்பர்களும், 600 முதல்நிலை பொறுப்பாளர்களும் பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர். பேரிடர்களை முன்கூட்டியே தெரிவித்து எச்சரிக்கை செய்யும்பொருட்டு கடலோர தாலுகாக்களான வானூர், மரக்காணம் ஆகிய பகுதிகளில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும், மாவட்டம் முழுவதும் பேரிடரின்போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 993 தற்காலிக நிவாரண மையங்களும், 86 மாணவ, மாணவிகளின் விடுதிகளும் தயார் நிலையில் உள்ளன.
மருத்துவ உபகரணங்கள்
மேலும் இடி-மின்னல் மற்றும் சூறைக்காற்றால் பொதுமக்களுக்கோ, கால்நடைகளுக்கோ, சாகுபடி பயிர்களுக்கோ பாதிப்பு நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக முதலறிக்கையை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையால் பாதிப்பு அதிகம் இருந்தால் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் விதத்திற்கு உதவிகரமாக பைபர் படகுகள், நாட்டு படகுகள், தொலைதொடர்புக்கு ஒலிபெருக்கிகள், மெகா போன், சுகாதாரத்துறையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், பைக் ஆம்புலன்ஸ், பொக்லைன் எந்திரம், அதிக திறன்வாய்ந்த நீர் ஏற்றும் மோட்டார் எந்திரம், வெள்ளநீர் உறிஞ்சும் எந்திரம், போதுமான அளவு மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், டார்ச் லைட்டுகள், அனைத்து ஊராட்சிகளிலும் போதுமான ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும், மின்துறையினர் தேவையான மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் இருப்பில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புயல் மழை தொடர்பாக பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அங்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். இந்த அறையை கட்டணமில்லா தொலைபேசி எண்-1077 மற்றும் 04146-223265 என்ற எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிவுறுத்தல்
இதை கேட்டறிந்த வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாகவும், முழு அக்கறையுடனும் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.