மழை-காற்று காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்


மழை-காற்று காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
x

மழை-காற்று காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

உயிர் சேதங்களை தவிர்க்க...

பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளடக்கிய பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை, காற்று காலங்களில் பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து மின் விபத்துகளையும், அதன் மூலம் ஏற்படும் உயிர் சேதங்களையும் தவிர்க்கலாம். அதன் விவரம் வருமாறு:-

மின் பாதையின் மின் கம்பி அறுந்து கிடந்தால், பொது மக்கள் எவரும் அதனை தொடாமலும் அருகில் செல்லாமலும், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின் கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ, பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

மின் வாரியத்தை சாராத நபர்கள் எவரும் மின் தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது. மின் தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து, பணியாளர் மூலம் மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும்.

டிராக்டர் மற்றும் லாரியில் கரும்பு போன்றவற்றை அளவுக்கதிகமாக ஏற்றி செல்லும்போது அருகில் உள்ள மின்பாதை, மின்கம்பிகளை உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் வீடு, கட்டிடம் கட்டும்போது மின் பாதையில் இருந்து போதிய இடைவெளிவிட்டு கட்ட வேண்டும். மின் பாதையின் அருகில் செல்லாமலும் மின்பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக கட்டுமான பணியினை செய்ய வேண்டும்.

ஆடு-மாடுகளை...

பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும்போது தரமான வயரிங் பொருட்களை உபயோகித்தும், முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்ய வேண்டும். மேலும் மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு இ.எல்.சி.பி. பொருத்த வேண்டும். பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தினை தவிர்த்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு முதலிய கால்நடைகளை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணியினை மேற்கொள்ளும்போது மின் இணைப்பை நிறுத்தம் செய்து, மீண்டும் உறுதிபடுத்திய பிறகு பணியை கவனமாக செய்ய வேண்டும், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story