விழுப்புரம் பகுதியில்விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்
விழுப்புரம் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்காக ஆண்டுதோறும் விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், அரசூர், சித்தலிங்கமடம், கரடிப்பாக்கம், திண்டிவனம் ஓங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளில் கைவினை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்
இதையொட்டி விழுப்புரம் பகுதிகளில் கைவினை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தற்போது காகித கூழ், சவுக்கை குச்சி, பேப்பர் அட்டை, சிமெண்டு அட்டைகள், மரவள்ளிக்கிழங்கு மாவு, மோல்டிங் மாவு ஆகியவற்றின் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூலப்பொருட்களின் விலையேற்றம்
இதுகுறித்து விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டை சேர்ந்த கைவினை தொழிலாளர்கள் கூறுகையில், இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
வருடம் முழுவதும் இந்த விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் எங்களுக்கு வேலை இருக்காது. இதை விட்டால் வேறு எந்த தொழிலும் கிடையாது. கிட்டத்தட்ட விவசாயம் போன்றதுதான் இந்த தொழிலும். இந்த கைவினை தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. காரணம் இதன் மூலப்பொருட்களின் விலையேற்றம்.
முன்பு கிழங்கு மாவு 50 கிலோ மூட்டை ஒன்று ரூ.900-க்கு விற்ற நிலையில் தற்போது இருமடங்காக ரூ.1,800 ஆக விலை உயர்ந்துள்ளது. அதுபோல் மோல்டிங் மாவு 50 கிலோ மூட்டை ஒன்று ரூ.200-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.350 ஆகவும், பேப்பர் மாவு ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.45 ஆகவும் உயர்ந்துள்ளது.
இவற்றை வெளியிடங்களில் இருந்து மொத்தமாக வாங்கிக்கொண்டு வருவதற்கான வாகன வாடகையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் 5 அடி விநாயகர் சிலை ரூ.5,500 முதல் ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை செய்த நிலையில் இந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரையும், 10 அடி சிலை ஏற்கனவே ரூ.14 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்த நிலையில் தற்போது ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். அவ்வாறு விற்பனை செய்தால் மட்டுமே எங்களுக்கு கட்டுப்படியாகும்.
கடன் உதவி
மேலும் விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் வழங்குவதுபோன்று இந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் எங்களை போன்ற கைவினை தொழிலாளர்களுக்கும் வங்கிகளில் மானிய கடன் உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அரசு தனிக்கவனம் செலுத்தி எங்கள் தொழிலை ஊக்குவிப்பதோடு, இத்தொழில் நலிவடையாமல் இருக்க பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும் என்றனர்.