பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கோவை
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
வார்டு சபை கூட்டம்
உள்ளாட்சி தினத்தையொட்டி கோவை மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் வார்டு சபை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கி தரையில் அமர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ஒரு பெண் தனது மாற்றுத்திறனாளி மகளை வைத்துக்கொண்டு வாடகை வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று 15 நாட்களுக்குள் அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று உடனடியாக ஒலிப்பெருக்கி மூலம் தெரிவித்தார். கோரிக்கை வைத்த உடனே அதை நிறைவேற்றி உத்தரவிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த அறிவிப்பு அங்கு இருந்த மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்துக்கு கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு சபை கூட்டம் இன்று (நேற்று) நடைபெறுகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 846 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பொது மக்களின் குறைகளை கோரிக்கையாக பெற்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கோவையில் ரூ.211 கோடியில் சாலை பணிகள் தொடங்கப்பட்டு சில இடங்களில் முடிக்கப்பட்டு உள்ளன. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலை பணிகளுக்காக சிறப்பு நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.26 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு வருகிறது. மீதமுள்ள பழுதடைந்த சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.
பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்
வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அதிகாாிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 1½ லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
பா.ஜ.க. தலைவர் தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி எதுவென்றால்... என்ற நகைச்சுவை போன்று பா.ஜ.க.வினர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வந்து முருக பெருமானின் கந்தசஷ்டி கவசம் பாடி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், ரவி, முன்னாள் எம்.பி.நாகராஜன், பொருளாளர் முருகன், கவுன்சிலர் சாந்தி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.