ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: மதுரையில் டிரோன்கள் பறக்க தடை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (18-ந் தேதி) மதுரை வருகிறார்.
மதுரை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை (18-ந் தேதி) மதியம் 12 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் அம்மன், சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து திரவுபதி முர்மு கோவிலின் பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார். கோவிலில் நடைபெறும் அன்ன தானத்திலும் பங்கேற்கிறார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி சுமார் 1 மணி நேரம் வரை இருப்பார் என்று தெரிகிறது. இதனை முன்னிட்டு ஒட்டு மொத்த மதுரை மாநகரமும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏற்கெனவே சித்திரை வீதிகள் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதிகளில் 8 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஜனாதிபதி மதுரை வருகையை முன்னிட்டு விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். கோவிலுக்கு வெளியே தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்தபடி போலீசார் கண்காணித்து வருகின்றனர். சித்திரை வீதியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தற்காலிக சிறப்பு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் இன்று முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவில் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தெற்குவாசல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குகள் தொடா்பான பழைய வாகனக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன. மேலும் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து சாலை சீரமைப்புப் பணிகள், வா்ணம் பூசுதல், வேகத் தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது.