இன்று தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு...! முதுமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு
முதுமலையில் சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு வருகை தருகிறார். அதன்படி அவர், டெல்லியில் இருந்து காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அருகே மசினகுடியில் உள்ள ஹெலிபேடுக்கு வந்திறங்குகிறார்.
தொடர்ந்து காரில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களை சந்திக்கிறார். வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோரை சந்தித்துவிட்டு மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், காரில் செல்லும் வழிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கக்கூடாது என்று விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
கோவை உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து 900 போலீசார் முதுமலைக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மசினகுடியில் ஹெலிபேடு மற்றும் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.