அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை உடனடியாக ஜனாதிபதி திரும்பப் பெறவேண்டும் - செல்வப்பெருந்தகை அறிக்கை
அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை உடனடியாக ஜனாதிபதி திரும்பப் பெறவேண்டும் என்று சட்டமன்ற காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டமன்ற காங். தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று சில எப்படி சொல்ல முடியுமென்று ஆளுநர் கேட்டிருக்கிறார். மேலும், திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்றும் பேசியுள்ளார். இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம், பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூர் பற்றி எரிகிறது. அங்குள்ள 16 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. உத்திரபிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த 2 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைப்பற்றியெல்லாம் கருத்து கூறமாட்டார் ஆளுநர். ஏனென்றால் அங்கு பாஜகவினர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய மக்களை, தியாகம் மக்களை அவமானப்படுத்தும் விதமாக, மக்கள் மேற்கொண்ட செய்த மகத்தான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, வெளிநாட்டினர் தூண்டுதல் பேரில் நடைபெற்ற போராட்டம் என்றும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். ஆளுநர் கூறும் இதுபோன்ற சர்ச்சைக் கருத்துக்களுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மேலும், மசோதாக்களை வழங்கிடவில்லை. நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிடவில்லை.
நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள், திராவிட மாடல் தமிழ்நாடு ஆட்சியின் தேர்தல் வாக்குறுதியை ஒத்திருப்பது போல உள்ளது என்று பெரும்பாலான சமூக செயல்பாட்டாளர்கள் கூறுவதையும், தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் இவ்வாறெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஆளுநர், தான் வகிக்கும் உயர்ந்த பொறுப்பிற்கு மதிப்பளித்து கருத்துக்களைக் கூறுவேண்டும். மாறாக, ஆளுநர் பொறுப்பை அவமதிக்கும் செயலில் அவர் ஈடுபடக்கூடாது. தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு மக்களுக்கு, தமிழ்நாட்டின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு மக்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தி, சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி அதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கத்தை மத்திய அரசும், ஆளுநரும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்களா? என்ற சந்தேகம் வருகிறது.
ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனை அடிப்படையில் செயல்பட வேண்டுமென அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ளது. அரசியல் சாசனத்தை மீறும் ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெறவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.