தேவகோட்டை பகுதியில் 42 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- யூனியன் தலைவர் தகவல்
தேவகோட்டை யூனியனில் 42 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை
தேவகோட்டை யூனியனில் 42 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார்.
யூனியன் கூட்டம்
தேவகோட்டை யூனியன் கூட்டம் அதன் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன், ஆணையாளர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மேலாளர் புவனேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. அப்போது கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதங்கள் வருமாறு:-
யூனியன் தலைவர் பிர்லா கணேசன்: 37 ஊராட்சிகளில் ரூ.87 லட்சம் செலவில் தேவையான பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
மேலும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இன்னும் ஓராண்டில் தேவகோட்டை யூனியனில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு முழுமை பெற்ற ஒன்றியமாக மாற்றப்படும். தற்போது டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலையில் தேவகோட்டை யூனியன் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது நிதி
கவுன்சிலர் நாகனிரவி : பொது நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ள போதிய நிதி இருந்தால் வேலை தொடங்குங்கள். இல்லை எனில் நிதி வந்த பிறகு வேலை ஒதுக்குங்கள்.
யூனியன் தலைவர் : பொது நிதியில் இருந்து தான் அனைத்து கவுன்சிலர்களுக்கும் வேலை ஒதுக்கப்படுகிறது. இப்படி பார்த்தால் எந்த கவுன்சிலிலும் வேலை பார்க்க முடியாது.
சாலைப்பணி
கவுன்சிலர் கணேசன்: பொது நிதியிலிருந்து செய்யப்படும் வேலைகளுக்கு உரிய மதிப்பீடு தொகை பல மாதங்களாக வழங்கவில்லை.
என்ஜினீயர்: அதை இப்பொழுதே பெற்றுக் கொள்ளலாம்.
கவுன்சிலர் திலகவதி பூபாலசிங்கம் : உடையார் குடியிருப்பு சாலை மோசமாக உள்ளது. அதை உடனடியாக போட வேண்டும்.
தலைவர்: அந்த சாலை போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கவுன்சிலர் ஜான்சிராணி: வெட்டிவயல் ஊராட்சியில் எந்த வேலையும் நடைபெறவில்லை. ஊராட்சி பக்கம் தலை காட்ட முடியவில்லை. துண்டிக்கப்பட்ட அத்திப்பட்டி கிராமம் என சொல்வார்களே அது போல் உள்ளது.
யூனியன் என்ஜினீயர்: அங்கு அனைத்து வேலைகளும் முடியும் நிலையில் உள்ளது. விரைவில் முடித்து விடுவோம்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.