தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரம்பலூர் மாவட்ட கிளையினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளரும், மாநில துணைச் செயலாளருமான ராஜேந்திரன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு 6, 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இ.எம்.ஐ.எஸ். வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும். கல்வி நலனுக்கு எதிரான முடிவுகள், தேசிய கல்வி கொள்கை 2020-ல் இருந்து நீக்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலனை ஆசிரியர்கள் முழுமையாக பெறும் வகையில் அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது. பின்னர் உண்ணாவிரதத்தை ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்மணி பழச்சாறு கொடுத்து முடித்து வைத்து போராட்ட விளக்க உரையாற்றினார்.


Next Story