பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம்: பயனாளிகள் ஆதார் எண்ணை இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணை இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
பி.எம்.கிசான் சம்மான் திட்ட பயனாளிகள் தவணைத் தொகையை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பி.எம்.கிசான் திட்டம்
தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் பிப்ரவரி 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்து இருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடிபணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி செய்வது அவசியம். நடப்பாண்டில், 13-வது தவணையான டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை உள்ள காலத்துக்கான தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக பி.எம்.கிசான் இணையதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ஆதார் எண்
ஆகையால் பயனாளிகள் பொதுசேவைமையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவோ ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். பயனாளிகள் http://pmkisan.gov.inஎன்ற இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.