முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு ரெயிலில் சென்றார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு ரெயிலில் சென்றார்
x

வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் அரசு பயணத்தை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

வேலூர்

2 நாட்கள் பயணம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகை தந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிக்கான திட்டம், கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரியுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை ஆய்வு கூட்டம் நடந்தது. அதை முடித்துக் கொண்டு அவர் காட்பாடி காந்திநகரில் உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு சென்றார்.

இதனால் அமைச்சர் வீட்டின் இடது பக்கமும், வலது பக்கமும் சாலை தொடங்கும் இடத்தில் தடுப்புகளை கொண்டு போலீசார் சாலையை மூடி சாலையில் 3 பக்கமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சாலையின் உள்ளே செல்ல பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அமைச்சர் வீட்டில் மதிய விருந்து

பிற்பகல் பகல் 2.5 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு வருகை தந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள் வருகை தந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் அமைச்சர் காந்தி உள்பட முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர். பினனர் 3 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அவருக்கு கட்சி தொண்டர்கள், சால்வை, புத்தகங்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காட்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேலூர் அனுகுலாஸ் ரெசிடென்சியில் வேலூர் மாவட்ட தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ரெயிலில் புறப்பட்ட முதல்-அமைச்சர்

முதல்-அமைச்சர் 2 நாட்கள் வேலூர் மாவட்ட பயணத்தை முடித்துவிட்டு காட்பாடியில் இருந்து மாலை 6.30 மணிக்கு ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை செல்வதற்காக மாலை 6 மணி அளவில் ஓட்டலில் இருந்து காரில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

காட்பாடி ரெயில் நிலையத்துக்கு 6.20 மணிக்கு வந்த அவரை ரெயில்வே டி.ஐ.ஜி. வனிதா நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார். ரெயில் நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. காத்திருப்பு அறையில் முதல்-அமைச்சர் காத்திருந்தார்.

தாமதமாக வந்த ரெயில்

முதல்-அமைச்சர் பயணம் செய்வதற்காக வழக்கமாக 2-வது நடைமேடைக்கு வரும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் நடைமேடையில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் பகுதியில் நடைபெற்ற தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக அதாவது 6.55 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையம் முதலாவது நடைமேடைக்கு வந்தது. முதலில் பயணிகள் அனைவரும் ரெயிலில் ஏறினார்கள். தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல்-அமைச்சர் பயணம் செய்வதற்காக பிரத்யேகமாக ரெயில் பெட்டி ஒன்று கடைசி பெட்டியாக இணைக்கப்பட்டிருந்தது. எனவே ரெயில் சிறிது தூரம் இயக்கப்பட்டு பிரத்யேக பெட்டி வி.ஐ.பி. காத்திருப்பு அறையின் முன்பாக மீண்டும் நிறுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 7.10 மணி அளவில் பிரத்யேக ரெயில் பட்டியலில் ஏறினார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகளும் சென்றனர். ரெயில் பெட்டியில் படிக்கட்டு பகுதிக்கு திரும்பி வந்த முதல்-அமைச்சர் வாசலில் நின்றபடி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை உயர்த்தியும் காட்டினார்.

அப்போது அங்கிருந்த தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். ரெயில் 7.15 மணி அளவில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு சென்றது.


Next Story