கமலாலய குளத்தில் படகு சவாரி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திருவாரூர் கமலாலய குளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், படகு சவாரி சென்றார். அப்போது குளத்தின் நடுவே உள்ள நாகநாதசாமி கோவிலை பார்வையிட்டார்

திருவாரூர்


திருவாரூர் கமலாலய குளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், படகு சவாரி சென்றார். அப்போது குளத்தின் நடுவே உள்ள நாகநாதசாமி கோவிலை பார்வையிட்டார்.

கமலாலய குளம்

திருவாரூர் தியாகராஜசாமி கோவிலின் மேற்கு வாசல் எதிரே கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவே நாகநாதசாமி கோவில் உள்ளது. இதனால் குளமே ஆலயமாக போற்றப்படுகிறது. நாகநாதசாமி கோவிலுக்கு படகில் தான் செல்ல முடியும்.

திருவாரூருக்கு நேற்று மதியம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். காட்டூரில் உள்ள பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவிடம், புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். பின்னர் வரும் வழியில் திருவாரூர்-தஞ்சை பைபாஸ் சாலையில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படகு சவாரி

அங்கிருந்து காரில் புறப்பட்டு வந்த மு.க.ஸ்டாலின், கமலாலய குளத்தின் வடகரைக்கு வந்தவுடன் காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் குளத்தின் படிக்கரைக்கு சென்ற அவர் திடீரென படகில் ஏறி அமர்ந்தார். அவருடன் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. மற்றும் சிலரும் ஏறினர்.

பின்னர் அந்த படகு மூலம் குளத்தின் நடுவில் உள்ள நாகநாதசாமி கோவிலுக்கு சென்றார். கோவிலை 20 நிமிடங்களுக்கு மேல் பார்வையிட்டு விட்டு மீண்டும் அதே படகு மூலம் கரைக்கு வந்தார்.

மனுக்கள் வாங்கினார்

கரைக்கு வரும்போது புதிதாக கட்டப்பட்ட கரையை பற்றி அதிகாரிகள், முதல்-அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.

மு.க.ஸ்டாலின் படகு சவாரி சென்றதை பார்க்க கமலாலய குளத்தின் கரையில் ஏராளமானோர் கூடியிருந்தனர். பலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் காரில் புறப்பட்டு சென்ற அவர் வழிநெடுகிலும் நின்ற மக்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இரவு சன்னதிதெருவில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்தார்.


Next Story