தமிழை உலகம் முழுவதும் உயர்த்தி காட்டுகிறார் பிரதமர் மோடி-பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
தமிழை உலகம் முழுவதும் பிரதமர் மோடி உயர்த்தி காட்டுகிறார் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தமிழை உலகம் முழுவதும் பிரதமர் மோடி உயர்த்தி காட்டுகிறார் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் நாகராஜன், முருகேசன், துணை தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் மார்த்தாண்டன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
மத்திய அரசு யாரையும் விட போவதில்லை
பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் காவல்துறை நடுநிலையாக வேலை செய்ய வேண்டும். அரசு 5 வருடம் வரும் போகும். ஆனால் நீங்கள் அப்படி அல்ல. தமிழகத்தில் ஒரு அமைச்சர் 2 ஆண்டு என்ன பேச்சு பேசினார். காலச்சக்கரம் மாறிக்கொண்டே இருக்கும் என்று அந்த அமைச்சரின் நிலை என்ன? என்று பார்க்க வேண்டும். தவறு செய்யும் அமைச்சரை தமிழக அரசு எப்படி பாதுகாக்கிறது என்று பாருங்கள். யாரையும் விடமாட்டோம் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். மத்தியில் உள்ள மோடி அரசும் யாரையும் விடப்போவது கிடையாது. முதல்-அமைச்சர் பயம் காட்டி பூச்சாண்டி காட்டினால் பா.ஜனதா தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள். மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழகத்தில் 30 நாட்களில் 66 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்தி கூற உள்ளோம்.
வழக்கமாக இது போன்ற விழா மேடைகளில் தலைவர்கள் தான் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இங்கு வித்தியாசமாக கட்சிக்காக உழைக்கும் ஒன்றிய தலைவர்களை, நகர தலைவர்களை, மண்டல் தலைவர்களை அமர வைத்திருக்கிறார்கள். ஏன் என்றால் இந்த கட்சிக்கு இவர்கள்தான் 99 சதவீதம் பணியாற்றுவார்கள். அதனால் தான் இவர்களுக்கு பா.ஜனதா மரியாதை செய்கிறது.
தமிழை உயர்த்தி காட்டுகிறார்
பிரதமர் மோடி தமிழை உலகம் முழுவதும் உயர்த்தி காட்டுகிறார். திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறது தி.மு.க. ஆனால் பா.ஜனதா தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று தி.மு.க. கூறுவதை எப்படி ஏற்க முடியும்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அருகில் சோழனின் செங்கோல் அமர்ந்துள்ளது. 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. எதுவுமே செய்யவில்லை. மத்திய அரசு தரும் இலவச திட்டங்களை தி.மு.க. அரசு செய்தது போல் காட்டுகிறது.சிவகங்கை மாவட்டத்திற்கு என்று 20 வாக்குறுதிகள் கொடுத்தனர் அதில் இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. வருகிற 2024-ல் மீண்டும் பா.ஜனதா ஆட்சி தான் அமையும். சிவகங்கையில் இருந்து இந்த முறை கண்டிப்பாக பா.ஜனதா செல்ல வேண்டும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் நாடாளுமன்றத்திற்கு செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், கோட்ட அமைப்பு செயலாளர் சுப நாகராஜன், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், உள்ளாட்சி மேம்பாட்டு மாநில தலைவர் சோழன் சீத. பழனிச்சாமி, மாநில விவசாய அணி துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.