தமிழுக்கு பெருமை தேடி தருகிறார், பிரதமர் மோடி


தமிழுக்கு பெருமை தேடி தருகிறார், பிரதமர் மோடி
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உலகெங்கும் எடுத்துக்கூறி பிரதமர் மோடி தமிழுக்கு பெருமை தேடி தருகிறார் என காரைக்குடியில் அண்ணாமலை பேசினார்.

சிவகங்கை

காரைக்குடி,

உலகெங்கும் எடுத்துக்கூறி பிரதமர் மோடி தமிழுக்கு பெருமை தேடி தருகிறார் என காரைக்குடியில் அண்ணாமலை பேசினார்.

பொருளாதாரத்தில் 5-வது இடம்

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடத்தி வரும் ஊழல் எதிர்ப்பு பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று மாலை காரைக்குடி அருகே கோவிலூருக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாமலை வருகையால் காரைக்குடி பழைய பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. அண்ணா சிலை, கொப்புடையநாயகி அம்மன் கோவில், கல்லுக்கட்டி எம்.ஜி.ஆர். சிலை, பெரியார் சிலை வழியாக டி.டி.நகரை அண்ணாமலை அடைந்தார்.

பின்னர் டி.டி.நகரில் திறந்தவேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

1947-ல் இருந்து 2014 வரையிலான மத்திய அரசின் ஆட்சிகளில் இந்தியர்களின் சராசரி வருமானம் ரூ.86 ஆயிரமாக இருந்தது. அதன் பிறகு 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரமாக உயர்ந்தது. பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா மோடி ஆட்சியில்தான் 5-வது இடத்திற்கு முன்னேறியது.

மது பாக்கெட்டுகள்

தமிழ் மொழியை, அதன் தொன்மையை, தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகளை உலகெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்கு பெருமை சேர்த்து வருபவர் பிரதமர் மோடி. காசியில் தமிழ் சங்கமம் நடத்தினார். செட்டிநாட்டு பகுதியினருக்கு சொந்தமாக காசியில் இருந்த இடத்தை அப்போைதய ஆளும் அரசு அபகரித்தது. அதனை தற்போதைய பா.ஜ.க. அரசு மீட்டுக்கொடுத்துள்ளது. தமிழக அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதாக கூறிவிட்டு விற்பனையை அதிகரிக்க பாக்கெட்டுகளிலும் மது விற்க முடிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனை அடைக்க இனிமேல் கடனே வாங்காமல் இருப்பதோடு வாங்கிய கடனை வட்டியும், அசலுமாகமாக செலுத்தவே 27 ஆண்டுகள் ஆகும். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வரும் வருமானத்தை விட, இரு மடங்கு மதுபான தொழிற்சாலைகளை நடத்தி வரும் தி.மு.க.வினரும், தரகர்களும் பெறுகின்றனர்.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை

தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தொகுதியின் மேம்பாட்டுக்காக குரல் கொடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தலைவர் சோழன் சித பழனிசாமி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாநில விவசாயிகள் பிரிவு தலைவர் நாகராஜன், மாநில விவசாயிகள் பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாண்டித்துரை, மாவட்ட துணை தலைவர் நாராயணன், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு குழு உறுப்பினர் காசிராஜா, இதர பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா சேதுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் துரை பாண்டியன், மாவட்ட தலைவர் பூப்பாண்டி, காரைக்குடி நகர வடக்கு தலைவர் பாண்டியன், தெற்கு தலைவர் மலைக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story