மீனவர்களுக்காக நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி செய்து வருகிறார்


மீனவர்களுக்காக நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி செய்து வருகிறார்
x

மீனவர்களுக்காக தனித்துறையை உருவாக்கி நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி செய்து வருகிறார் என்று கடலூரில் நடந்த கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா கூறினார்.

கடலூர்

மத்திய அரசு மீனவர்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாகர் பரிக்ரமா- கட்டம் -9 திட்டத்தின் கீழ் கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதற்கு மத்திய மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா தலைமை தாங்கி, மத்திய அரசு திட்டங்கள் குறித்து மீனவர்களிடம் பேசினார். தொடர்ந்து மத்திய இணை மந்திரி எல்.முருகனுடன் சேர்ந்து மீனவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 136 பேருக்கு ரூ.60 லட்சத்து 85 ஆயிரம் வங்கி கடன் ஆணையை வழங்கினார். ஒருவருக்கு குளிர் காப்பு வசதியுடன் கூடிய 4 சக்கர வாகனம் (40 சதவீத மானியம்) ரூ.20 லட்சத்தில் வாங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா மீனவர்கள் மத்தியில் பேசியதாவது:-

பெரும் உதவியாக இருக்கிறது

டெல்லியில் இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி, அங்கு அமர்ந்து கொண்டு அவர் செயல்படுத்தும் திட்டங்கள், இங்கே களத்தில் இருக்கும் மீனவ சமுதாய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. மீனவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அவர் இந்த துறைக்கான ஒரு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார். அதில் 60 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.

8 ஆயிரம் கிலோ மீட்டர் கடற்கரையோர பகுதியை வளப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த துறை உருவாக்கப்பட்டது. இதன் ஏற்றுமதி ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த துறையை புறக்கணிக்கக்கூடாது என்பதற்காக தனித்துறையை ஏற்படுத்தி நல்ல திட்டங்களை வகுத்து சிறப்பு செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு மத்திய மந்திரி கூறினார். முன்னதாக மத்திய அரசு திட்டத்தில் பயன் பெற்ற மீனவர்கள் விளக்க உரையாற்றினர்.

கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை தலைமை செயலாளர் அகிலேஷ் நிக்கி, இணை செயலாளர் நீத்து பிரகாஷ், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய முதன்மை திட்ட அலுவலர் நரசிம்ஹா மூர்த்தி, கடலூர் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் குமரேசன் உள்பட மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story