ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்ததற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகிறீர்கள். சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று, 2024-ம் ஆண்டு ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளது. ஏற்கனவே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரிக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதியுள்ளோம்.
விரைவில் வழங்க நடவடிக்கை
இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.