பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்; 20 பயணிகள் காயம்


பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்; 20 பயணிகள் காயம்
x

பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயமடைந்தனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது

நாமக்கல்லில் இருந்து நேற்று ஒரு தனியார் பஸ் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள ஆமூர் கடைவீதி பகுதியை சேர்ந்த பார்த்தீபனின் மகன் வாசுதேவன்(வயது 33) ஓட்டி வந்தார்.

திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் வாத்தலை அருகே கிளியநல்லூர் என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர். மேலும் அலறி அடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து வெளியேறினர்.

20 பயணிகள் காயம்

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன்சிங் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர் செய்தனர். இதைத்தொடர்ந்து கவிழ்ந்து கிடந்த பஸ் கிரேன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிவேகத்தில் வருவதால் விபத்து

இந்த விபத்து பற்றி பயணிகள் கூறுகையில், திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் தொட்டியம் - நம்பர் ஒன் டோல்கேட் வரையிலான சாலையானது மிகவும் குறுகியதாக உள்ளது. இந்த வழித்தடத்தில் வரும் தனியார் பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகத்தில் வருவதால், கட்டுப்பாட்டை இழந்து அவ்வப்போது இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது. இதுபோன்று அடிக்கடி விபத்துக்குள்ளாகும் தனியார் பஸ்களை அனுமதிக்கக்கூடாது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story