விருத்தாசலம் சப்-கலெக்டர் வாகனம் மீது மோதுவதுபோல் வந்த தனியார் பஸ்: அதிவேகமாக ஓட்டியதாக டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்
விருத்தாசலம் சப்-கலெக்டர் வாகனம் மீது மோதுவதுபோல் தனியார் பஸ் வந்தது. அதிவேகமாக ஓட்டியதாக டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விருத்தாசலம்,
சப்-கலெக்டர் வாகனம் மீது...
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று நேற்று மதியம் 12.45 மணிக்கு கடலூருக்கு புறப்பட்டது. இந்த தனியார் பஸ், விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது சப்-கலெக்டர் லூர்துசாமியின் வாகனமும், சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கடலூர் நோக்கி புறப்பட்டது.
அந்த சமயத்தில் வேகமாக வந்த தனியார் பஸ், சப்-கலக்டரின் வாகனம் மீது மோதுவதுபோல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், சாமர்த்தியமாக சப்-கலெக்டரின் வாகனத்தை திருப்பினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரூ.2 ஆயிரம் அபராதம்
இதனிடையே அந்த தனியார் பஸ், சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இருந்த பஸ் நிறுத்தத்திலும் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து சப்-கலெக்டர் லூர்துசாமி உத்தரவின் பேரில் விருத்தாசலம் போலீசார், அந்த தனியார் பஸ்சை வழிமறித்து நிறுத்தி டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அதிவேகமாக தனியார் பஸ்சை ஓட்டியதாக டிரைவரான ஊ.மங்கலத்தை சேர்ந்த விஜய் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும் அதிவேகமாக பஸ்சை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரைவரை போலீசார் எச்சரித்தனர். 30 நிமிடத்திற்கு பிறகு அந்த தனியார் பஸ், கடலூருக்கு புறப்பட்டு சென்றது.