போலீஸ் விசாரணைக்கு பயந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி
சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டு வந்த தனியார் நிறுவன ஊழியர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றார்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த வேடபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தேவதத்தன் (வயது 40). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சமூக வலைதளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குறித்து அவதூறு தகவல்கள் வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தேவதத்தனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழைப்பாணை கொடுத்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக தேவதத்தன் மன உளைச்சலோடு காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மது குடித்துள்ளார். நேற்று காலை திடீரென தனக்குத் தானே கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு வயல்வெளியில் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.