170 பேரிடம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது

சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 170 பேருடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்
சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 170 பேருடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சிங்கப்பூரில் வேலை
கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், கோவையை அடுத்த வடவள்ளி மருதமலை ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் 22-ந் தேதியும், 29-ந் தேதியும் சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவித்தனர்.
அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சிங்கப்பூரில் பிரபல கம்பெனிக்கு மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், சிவில் என்ஜினீயர், சூப்பர்வைசர், பிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் வடவள்ளி ஏஜென்சி அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்த போது விசா, பயண கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
170 பேரிடம் மோசடி
இதனை நம்பி ஆண்கள், பெண்கள் என 150 க்கும் மேற்பட்டோர் அவர்கள் சொன்ன வேலைக்கு தகுந்தவாறு ரூ.1 லட்சம், முதல் ரூ.2 லட்சம் வரை என ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் பணம் செலுத்தினர். பின்னர் எங்களது செல்போன் எண்ணுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை தயாராகிவிட்டது என போலியாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக ஏஜென்சி நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நேரில் சென்று பார்த்தபோது அலுவலகத்தை பூட்டப்பட்டு இருந்தது.
விசாரித்ததில் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளராக ராமமூர்த்தி, அதிகாரி மோகன கிருஷ்ணன், மற்றும் ஊழியர்கள் சரண்யா, ஜோதி ஆகியோர் சுமார் 170 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதிகாரி கைது
இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரி கோவில்பாளையத்தைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் (வயது 42) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மோசடி பணம் ரூ.21 லட்சம், மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மோகனகிருஷ்ணன் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. நிறுவனத்தின் உரிமையாளரான ராமமூர்த்தி உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.